குறுந்தொகை 128 : பரணர்
குணகடற் றிரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் றொண்டி
முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்
சேய ளரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே
~ கிழக்குக் கடலின் அலைகள் மீது பறந்து வரும் வலிமையிழந்த வலசை நாரையானது, வலிமையான தேர்களை ஓட்டும் வல்லமை பெற்ற மாமன்னனின் தொண்டித் துறைமுகத்தருகே கலக்கின்ற ஆற்று நன்னீரில் வாழும் அயிரைமீன் கூட்டத்தைக் கண்டு ஆவென வாய்பிளந்து வருவதைப் போலக் கிடைப்பதற்கு அரியவளென்று தெரிந்தும் காதல் எனும் நோய் வயப்படுவாயாக என் நெஞ்சமே .. குணமாகாமல் அந்நோயிலேயே எப்போதும் இருப்பாயாக ..
- கிழக்குக் கடலில் (Bay of Bengal) அமைந்துள்ள தொண்டித் துறைமுகம் பற்றியும் அங்கிருந்து பல நாட்டவரோடு வாணிபம் நடந்ததற்கான சான்றாக அமைந்துள்ளது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இப்பாடல். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டி அருகில் அகழ்வாராய்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளன.
நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil. – Kurunthogai 128 : Paranar