மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் அரை மாத்திரை ..

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி
மலக்கண் விளைபிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுந்நோய்
விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனா
நிலக்க ணுறைசுப் பிரமணி யானந்த நின்மலனே.


தமிழ் இலக்கணத்தில் மெய் எழுத்துக்கு அரை மாத்திரை. அந்த அளவுக்குக் கூட மாத்திரை கிடைக்காமல் வயிற்றுப் போக்கால் [காலரா] பலர் இறந்து போயுள்ளனர். மனித மனதில் தோன்றும் மூன்று விதமான நோய்களை நீக்கும்  வல்லமை படைத்த தூய்மையானவரே , இந்நிலத்தில் மக்களுக்காக இருக்கும் சுப்ரமணியரே , பெருகும் இந்நோய் விலக அருள்புரிய வேண்டும்.

முன்சீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் , மேலே உள்ள செய்யுளைக் கடிதமாகத் திருவாடுதுறை ஆதினம் சுப்ரமணிய சந்நிதானம் அவர்களுக்கு 1875 வாக்கில் எழுதினார்.  கடிதத்தைக் கண்டவுடன் சந்நிதானம் ஏராளமாக மருந்துகளை வருவித்து மக்களுக்குச் சேர்ப்பித்தார். அன்பாலும் தமிழாலும் ஒன்றிணைந்து நன்மை செய்தனர் பெரியோர்கள்.



தமிழ் மொழியின் முதல் புதினம் [novel] ‘ பிரதாப முதலியார் சரித்திரம் ‘ – . இதை இயற்றியவர் அக்கால கிராம முன்சீப் ( Munsiff ) மாயூரம் சாம்யூல் வேதநாயகனார் அவர்கள். 1857 இல் எழுதப்பட்டதாகவும் ஆனால் 1879 இல் வெளிவந்ததாகச் சொல்லப்படுகின்றது . முதல் ‘ உரைநடை ‘ நூல். செய்யுள் வழக்கில் தமிழ் எழுதப்பட்டு வந்த நிலையில் உரைநடை  [ Prose ] / பேச்சு வழக்கில் எழுதப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ முன்சீப் ‘ [ கிராம நீதிபதி]’  ஆகப் பணியாற்றி மக்களிடம் நற்பெயர் ஈட்டியிருந்தார் வேதநாயகனார்.  நேர்மையாளராகவும் கோபக்காரராகவும் அறியப்படிருந்தார். 150 – 200 வருடங்களில் மனித மனம் எவ்வளவு மாறியுள்ளது அல்லது மாறாமல் உள்ளது என்பதை அறிய ‘ சுவாரசியத்திற்காக ‘ இப்புதினத்தை வாசிக்கலாம். தமிழ்ச் செய்யுளிலும் அவருக்கு இருந்த புலமையை மேலே உள்ள பாடல் எடுத்துக்காட்டும். வணங்குவோம்.  

Mayuram Vedhanayagam Pillai

நல்லதமிழ் : இணையவழித் தமிழ் Learn Tamil grammar Nallatamil.

Scroll to Top